மதுரையில் போஸ்டர் ஒட்டுவதில் தொடங்கிய மோதல் அரசியல் பகையாக மாறியதன் விளைவு… கடந்த 22 ஆண்டுகளில் 22 பேர் பழிக்குப் பழியாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதிர வைக்கும் இந்த சம்பவத்தின் முழுப் பின்னணிதான் என்ன? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்…
மதுரை மாநகராட்சியின் முன்னாள் மண்டலத் தலைவராகப் பதவி வகித்தவர் வி.கே. குருசாமி. இவரது அக்கா மகன் காளீஸ்வரன் என்கிற கிளாமர் காளி, கடந்த 22 ஆம் தேதி இரவு அவரின் வீட்டின் அருகே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் காளீஸ்வரனை வெட்டிச் சாய்த்தது. ராஜபாண்டியின் ஆதரவாளரான வெள்ளைக் காளி திட்டமிட்டபடி இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது. யார் இந்த ராஜபாண்டி? யார் இந்த குருசாமி? மதுரையில் ரத்த வெறியாட்டம் ஆடும் அளவிற்கு இந்த இரண்டு கும்பலுக்கும் இடையே அப்படியென்னதான் விரோதம்…சினிமாக்களையே மிஞ்சும் அளவிற்கு அதிர்ச்சி திருப்பங்களுடன் அரங்கேறியுள்ளது இந்த நிஜ சம்பவம்…
வி.கே. குருசாமியும் ராஜபாண்டியும் வேறு யாருமல்ல… இருவரும் உறவுக்காரர்கள்தான்….. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கருத்தரிவான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அங்கே வேலை ஏதும் கிடைக்காததால், இருவருமே மதுரைக்கு இடம் பெயர்ந்தனர். இதில் வி.கே. குருசாமி தி.மு.கவிலும் ராஜபாண்டி அ.தி.மு.கவிலும் இணைய, இருவரது வீடுகளுமே காமராஜர்புரத்தில்தான் அமைந்துள்ளது.
2003ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற தருணம். அப்போது மதுரையின் முக்கிய பகுதியில் அவரவர்களின் கட்சி சார்பாக போஸ்டர் ஒட்டுவதில் இருவருக்கும் இடையே முதன் முதலாக மோதல் வெடித்தது. இந்த மோதல் ஒரு கோயில் திருவிழாவில் பெரிதாக வெடிக்க, ராஜபாண்டி ஆதரவாளரும் உறவினருமான சின்ன முனுசு என்ற முனுசாமியை வி.கே.குருசாமியின் ஆட்கள் கொலை செய்தனர்.
இந்த சம்பவத்தால் சின்ன முனுசுவின் தம்பியான காளீஸ்வரன் என்ற வெள்ளை காளி, குருசாமியின் மீது கடும் கோபத்தில் இருந்தார். இதன் எதிரொலியாக வி.கே.குருசாமி தரப்பைச் சேர்ந்த மாரிமுத்து, மூர்த்தி, ரமேஷ் ஆகிய மூவரும் கடந்த 2008ம் ஆண்டு கொலை செய்யப்பட்டனர். தொடர்ந்து கடந்த 2013ல் வி.கே.குருசாமியின் தங்கையின் கணவர் பாம்பு பாண்டி கொல்லப்பட்டார்.
இதற்குப் பழி வாங்க ராஜபாண்டி தரப்பைச் சேர்ந்த மொட்டை மாரி என்பவரை 2015ம் ஆண்டு வி.கே. குருசாமி தரப்பு கொலை செய்தது. பதிலுக்கு அதே ஆண்டில் வி.கே.குருசாமி தரப்பைச் சேர்ந்த முனியசாமியை ராஜபாண்டி தரப்பு கொலை செய்தது. இதற்குப் பிறகும் இரு தரப்பிலும் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டனர். இப்படியாக இரு தரப்புக்கு இடையிலான கொலை வெறியாட்டம் இத்துடன் நின்றுவிடவில்லை. தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.
கடந்த 2016ம் ஆண்டு கமுதியில் இருந்து மதுரைக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்த வி.கே.குருசாமியின் மருமகன் காட்டுராஜா என்ற முத்துராமலிங்கம் சுற்றுச்சாலை பகுதியில் பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு ராஜபாண்டியின் ஆட்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். தொடர்ந்து குருசாமியின் வீட்டிற்குள் புகுந்த ராஜபாண்டியின் ஆட்கள் அவரையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்ய முயன்றனர். ஆனால், அதற்குள் அங்கு வந்த காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி சிலரைக் கைது செய்தது.
என்றாலும், மருமகனை இழந்திருந்த வி.கே குருசாமி கொதித்துப் போயிருந்தார். மருமகனின் இழப்புக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, குருசாமியின் ஆட்கள் 2017ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ராஜபாண்டியின் மகன் முனியசாமி என்ற தொப்புளியை பத்து கார்களில் வந்து கமுதிக்குக் கடத்திச் சென்றனர். அரியமங்களம் அருகே இரும்புக் கம்பியால் முனியசாமி என்ற தொப்புளியை அடித்துக் கொலை செய்து உடலை தீ வைத்து எரித்தனர்.
முனியசாமியைக் காணாமல் தேடிய அவரது மனைவி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டம் மதுரையில் நடந்தபோது அந்தக் கூட்டத்திலேயே இது குறித்து அவரது மனைவி சத்தம்போட, காவல்துறை தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியது. இதற்குப் பிறகுதான் முனியசாமி கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கொலை தொடர்பாக, வி.கே.குருசாமி மகன் வி.கே.ஜி.மணி மற்றும் அவரது உறவினர் பழனி முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
முனியசாமி கொலைக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகக் கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது வி.கே. குருசாமியின் உறவினர் எஸ்.எஸ் பாண்டியன் படுகொலை செய்யப்பட்டார். இந்த காலகட்டத்தில் அரசியலிலும் ஓரளவு வளர்ச்சியடைந்த வி.கே. குருசாமி மதுரை மாநகராட்சியின் கிழக்கு மண்டல தலைவராகப் பதவி வகித்தார். ஆனாலும் தனது மகன் கொல்லப்பட்டதற்குப் பதிலாக வி.கே. குருசாமியின் மகன் வி.கே.ஜி.மணியைப் போட்டுத் தள்ள வேண்டும் என ராஜபாண்டியும் அவரது கும்பலில் இருந்த வெள்ளை காளியும் முடிவு செய்தனர்.
இந்த நிலையில்தான் இரு தரப்பிலும் மாறி மாறி விழுந்த தலைகள் மதுரை நகர் காவல்துறைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. இரு தரப்பையும் அழைத்து நன்னடத்தை பத்திரம் எழுதி வாங்கினர். கொலை, கொலை முயற்சி வழக்கில் குருசாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். முதலில் பாளையங்கோட்டை சிறையிலும் பிறகு வேலூர் சிறையிலும் அடைக்கப்பட்ட குருசாமி வெளியில் வந்தபோது, ராஜபாண்டியை எதிர்த்து நிற்க தன்னுடன் ஆட்கள் இல்லை என்பதால், மதுரையை விட்டு வெளியேறி பெங்களூர், சென்னை என வசிக்க ஆரம்பித்தார். குருசாமியின் மீது கொலை, கொலை முயற்சி, உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்தது உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் மதுரை காவல் நிலையங்களில் நிலுவையிலிருந்தன.
இந்த வழக்குகளில் ஆஜராவதற்காகக் கடந்த 2023ஆம் ஆண்டு மதுரை வந்த குருசாமி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார். மதுரையில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் சென்றடைந்தார். அதற்கு அடுத்த நாள் பெங்களூர் கம்மன்னஹள்ளியில் உள்ள சுக்சாகர் ஹோட்டலில் டீ குடிப்பதற்காக உட்கார்ந்திருந்த போது 5 பேர் கொண்ட கும்பல் காரில் வந்து திடுதிப்பென இறங்கியது. வாள், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் குருசாமியைச் சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற குருசாமி தற்போது வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வழக்குகளிலும் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார்.
இந்த நிலையில்தான் வெள்ளைக் காளி கடந்த 2022-ஆம் ஆண்டு கரிமேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாகக் கைது செய்யப்பட்டார். தற்போது சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகிறார். வெள்ளை காளி தனது அண்ணனைக் குருசாமியின் ஆட்கள் கொலை செய்ததால் அவரது குடும்பம் முழுவதையும் அழிக்கப்போவதாகச் சபதம் செய்து, அதன் தொடர்ச்சியாகக் குருசாமி ஆட்களைக் கொலை செய்து வந்தார்.
வெள்ளை காளியைப் பொறுத்தவரை 40க்கும் மேற்பட்ட கூலிப்படையினரை வைத்துக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் கொலை, கஞ்சா விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
வி.கே குருசாமி தற்போது தி.மு.கவிலிருந்து விலகிச் செயல்பட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜபாண்டி உடல் நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். இதனால், குருசாமியை பழிவாங்கும் பணியை வெள்ளைக் காளி முன்னெடுத்து வருகிறார் என்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு குருசாமியின் அக்கா மகன் காளீஸ்வரன் என்ற கிராமர் காளியை நான்கு பேர் கொண்ட கும்பல் வெட்டி சாய்த்தது. இதன் பின்னணியில் சிறையிலிருந்தபடியே வெள்ளை காளி மூளையாகச் செயல்பட்டுத் திட்டமிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு கேங்-கிற்கு இடையேயான தீராத பகையால் கடந்த 22 ஆண்டுகளில் 22 கொலைகள் விழுந்து மதுரையின் ரத்த சரித்திரமாக மாறி இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏதுமில்லை எனப் பலரும் நிம்மதிப் பெருமூச்சு விட்ட நிலையில்தான் தற்போது குருசாமியின் அக்கா மகன் காளீஸ்வரன் கொலை செய்யப்பட்டுள்ளார். இது மீண்டும் வழக்கம்போல் தொடர்ந்து விடக் கூடாது என்பதே மதுரை மக்களின் குரலாக ஒலிக்கிறது.