மதுரையில் ஆண் டெய்லர்கள் மூலம் கட்டாயப்படுத்தி அளவெடுக்க வைத்ததாக 10-ஆம் வகுப்பு மாணவி அளித்த புகாரின் பேரில் தனியார் பள்ளி ஆசிரியை உட்பட 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாநகர் பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளியில் சீருடை தைப்பதற்காக ஒரு ஆண் மற்றும் பெண் டெய்லர்கள் மாணவிகளை அளவு எடுத்துள்ளனர்.
அப்போது 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், மாணவிகளை அளவு எடுக்க ஆண் டெய்லரை எதற்கு அனுமதிக்கிறீர்கள் என ஆசிரியையிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், ஆண் டெய்லர் அளவு எடுத்தால், தன்னால் அளவு கொடுக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாகப் பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கை எடுக்காததால், மதுரை நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்துள்ளார்.
அதில், ஆண் டெய்லர் தன்னை அளவெடுக்கும்போது தனது அனுமதியின்றி உடல் பாகங்களை தொட்டதாகவும், அதனால், ஆசிரியை மற்றும் டெய்லர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, தனியார் பள்ளி ஆசிரியை மற்றும்2 டெய்லர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.