கோடநாடு எஸ்டேட்டின் பங்குதாரராக இருந்த தன்னை, அதில் இருந்து நீக்கியது குறித்து தெரியாது என ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் சிபிசிஐடி விசாரணையில் தெரிவித்துள்ளார்.
கோடநாடு வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கோடநாடு எஸ்டேட்டின் பங்குகள் குறித்து சுதாகரனிடம் 40 கேள்விகள் கேட்கப்பட்டன.
அதற்கு பதிலளித்த அவர், 1994ஆம் ஆண்டு முதல் கோடநாடு எஸ்டேட் பங்குதாரர்களில் ஒருவராக இருந்து வந்ததாகவும், அதன் பின்னர் தன்னை பங்குதாரரில் இருந்து நீக்கியது குறித்து எதுவும் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.
கோடநாடு எஸ்டேட் வாங்கப்பட்டபோது அதில் ஒரு சிறிய வீடு இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். கோடநாடு எஸ்டேட்டில் ஒருமுறை மட்டுமே தங்கி இருந்ததாகவும், அதன் பின்னர் கோடநாடு எஸ்டேட்டிக்கு செல்லவே இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவத்தை நாளிதழ் செய்திகள் மற்றும் சிறையிலிருந்த தொலைக்காட்சி மூலமாக அறிந்து கொண்டதாகவும், இந்த சம்பவங்களை சசிகலா, இளவரசி ஆகியோர் மூலம் தெரிந்து கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனவும் சுதாகரன் பதிலளித்துள்ளார்.