காவல்துறைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த புகாரை முடித்து வைத்த மாநில மனித உரிமைகள் ஆணைய உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின்போது, திமுக பிரமுகரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
கைது நடவடிக்கையின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக ஜெயக்குமார் மற்றும் அவரது மகன் ஜெயவர்தன் ஆகியோர் சார்பில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் 2 புகார்கள் அளிக்கப்பட்டன.
இதனை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம், காவல்துறை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருவரின் புகாரையும் முடித்து வைத்து கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து ஜெயக்குமார் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், காவல்துறைக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை விசாரிக்காமல் முடித்து வைத்தது தவறு எனக்கூறி, மாநில மனித உரிமை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
மேலும், ஜெயக்குமார் அளித்த புகாரை மீண்டும் விசாரிக்க மாநில மனித உரிமை ஆணைய தலைவருக்கு உத்தரவிட்டனர்.
















