வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி அமலுக்கு வரும் பரஸ்பர வரிகளிலிருந்து சில நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளிக்கலாம் என்ற எதிர்பார்க்கப் படுகிறது. இது, அமெரிக்காவுக்கான ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க உதவும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
தேசத்துக்கே முன்னுரிமை என்ற முழக்கத்தை முன்வைத்து, இரண்டாவது முறையாக அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் வெற்றிப் பெற்றார். பதவி ஏற்ற உடனேயே சீனாவுடனான வர்த்தக போரைத் தொடங்கினார். கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல், அனைத்து சீனப் பொருட்களுக்கும் 10 சதவீத வரியை விதித்தார்.
பிறகு 30 நாட்களில், 20 சதவீதமாக சீனாவுக்கான வரி அதிகரிக்கப்பட்டது. அடுத்து கனடா, மெக்சிகோ நாடுகள் மீது கடுமையான வரிவிதிப்பை ட்ரம்ப் முன்னெடுத்தார்.
கனடா மற்றும் மெக்சிகோவுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்பட்ட போதிலும், அமெரிக்கா-மெக்சிகோ-கனடா ஒப்பந்தத்துக்கு உட்பட்ட பொருட்களுக்கான வரிகள் ஏப்ரல் 2 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டன. கனடாவில் இருந்து வரும் எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான திட்டமிடப்பட்ட 10 சதவீத வரியும் ஏப்ரல் 2 ஆம் தேதி வரை அமெரிக்காவால் நிறுத்தி வைக்கப்பட்டது.
தொடர்ந்து, பிற நாடுகள் மீது பரஸ்பர வரி விதித்து உலக வர்த்தகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார் அதிபர் ட்ரம்ப். ஏற்கெனவே, இந்தியாவை அதிக வரி விதிக்கும் நாடு என்று விமர்சித்த ட்ரம்ப். இந்தியாவுக்கும் பரஸ்பர வரியை விதித்தார்.
அமெரிக்காவின் போதைப் பொருள் புழக்கத்துக்குக் காரணமாக இருப்பதால், சீனா, கனடா மற்றும் மெக்சிகோவுக்கு கூடுதல் வரிகளை அமெரிக்கா விதித்துள்ளது. அந்த நாடுகளுடனான அமெரிக்காவின் பிரச்சனை வேறு. இந்தியாவுடன் கட்டண பிரச்சனை மட்டுமே அமெரிக்காவுக்கு உள்ளது.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்குத் தொடர்ந்து அதிக வரிகளை இந்தியா விதித்து வருகிறது. அதே நேரத்தில், இந்தியா, இறக்குமதியை விட அமெரிக்காவுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்கிறது.
அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா எந்த அளவு வரி விதிக்கிறதோ அதே அளவு அமெரிக்காவும் இந்திய பொருட்களுக்கு வரி விதிப்பது தான் ட்ரம்ப் அறிவித்திருக்கும் பரஸ்பர வரியாகும்.
வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல், அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர வரி அமலுக்கு வருகிறது. எனவே அதற்குள், அமெரிக்க பொருட்களுக்கான வரியைக் குறைத்து, இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, (“India-US Fast Track Mechanism” )”இந்தியா-அமெரிக்க ஃபாஸ்ட் டிராக் மெக்கானிசம்” என்ற பேச்சுவார்த்தையை இருநாடுகளும் கடந்த புதன் கிழமை தொடங்கின.
23 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க இறக்குமதிகள் மீதான வரிகளைக் குறைக்க இந்தியா தயாராக உள்ள நிலையில், விரைவில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் (BTA) அடிப்படை வரையறைகள் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க பொருட்களுக்கான வரியை குறைத்து இறக்குமதி வரிகளில் உள்ள ஏற்றத்தாழ்வைச் சரி செய்ய இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.
கூகுள் வரி எனப்படும், அமேசான் மெட்டா போன்ற வெளிநாட்டுத் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான சமநிலை வரியை இந்தியா ரத்து செய்துள்ளது. முன்னதாக, ஹார்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிள்களுக்கான இறக்குமதி வரி 10 சதவீதம் குறைக்கப் பட்டது. இதேபோல், போர்பன் விஸ்கிக்கான இறக்குமதி வரியும் 150 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாகக் குறைக்கப் பட்டது.
ஏற்கெனவே, 2030 ஆம் ஆண்டுக்குள் இந்திய-அமெரிக்க இருதரப்பு வர்த்தகத்தை சுமார் 500 பில்லியனாக அதிகரிப்பதாகப் பிரதமர் மோடியும், ட்ரம்பும் ஒன்றாக உறுதியளித்துள்ளனர். இதன் அடிப்படையில், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கும் பிறகு பரஸ்பர கட்டணங்களிலிருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிக்கப் படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
வரும் ஏப்ரல் மாத இறுதியில், மத்திய அமைச்சர் நிதியமைச்சர் அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்லும் போது, இந்திய அமெரிக்க வர்த்தக உறவு மேலும் வலிமை பெறும் என்று கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், உலகளவில் வாகனத் தொழிலை உலுக்கும் விதமாக, வாகன இறக்குமதிக்கு 25 சதவீத வரியை ட்ரம்ப் அறிவித்திருக்கிறார். இந்தப் புதிய வாகன இறக்குமதி வரி இந்திய வாகனத் தொழில் துறையையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.