சட்டமன்ற தேர்தலுக்காகவும் கூட்டணி நலனுக்காகவும் அரசியல் சாசனத்தை முதலமைச்சர் ஸ்டாலின் குப்பைத் தொட்டியில் போட்டு வைத்துள்ளதாக, அறப்போர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே அறப்போர் இயக்கம் சார்பில் அறவழி உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வலியுறுத்தியும், மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசை கண்டித்தும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று கூறும் முதலமைச்சர் ஸ்டாலின், உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பதாக குற்றஞ்சாட்டினார். முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் மாநில தேர்தல் அதிகாரி ஜோதி நிர்மலாசாமியின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது எனக்கூறிய அவர், அரசியல் சாசனத்தை முதலமைச்சர் குப்பைத்தொட்டியில் போட்டுள்ளதாக விமர்சித்தார்.
ஊராட்சி தேர்தலை நடத்த முடியவில்லை என்றால், முதலமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.