ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், இந்தப் பண்டிகை சகோதரத்துவ உணர்வை வலுப்படுத்துவதோடு, இரக்கம், நல்லெண்ணம் மற்றும் தொண்டு ஆகியவற்றின் செய்தியையும் தெரிவிக்கிறது என தெரிவத்துள்ளார்.
அனைவரின் வாழ்க்கையிலும் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்து, நன்மையின் பாதையில் முன்னேறுவதற்கான உணர்வை அனைவரின் இதயங்களிலும் விதைக்க வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ரமலான் பண்டிகை சமூகத்தில் நம்பிக்கை, நல்லிணக்கம் மற்றும் கருணையின் உணர்வை அதிகரிக்கட்டும் என்றும், உங்கள் அனைத்து முயற்சிகளிலும் மகிழ்ச்சியும் வெற்றியும் கிடைக்கட்டும் என தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், புனித ரமலான் பண்டிகையைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும், தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
அனைவரின் வாழ்விலும், அமைதியும், மகிழ்ச்சியும் நிலவவும், அன்பும், நிம்மதியும் நிலைக்கவும், சகோதரத்துவமும், நல்லிணக்கமும் சிறக்கவும், செழிப்பை அளிக்க கூடிய நன்னாளாக, இந்த ரமலான் தினம் அமையட்டும் என, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வதாக அண்ணாமலை கூறியுள்ளார்.