ரமலான் பண்டிகை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகையான ரமலான் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் திரளான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். குறிப்பாக டெல்லி நாடாளுமன்ற வீதி மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் பாஜக மூத்த தலைவர் ஷானவாஸ் ஹுசைன் கலந்துகொண்டார்.
அதேபோல, மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உள்ள எய்த்கா மஸ்ஜித் மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில், பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள ஜும்மா மஸ்ஜித் மசூதியிலும் இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு, ரமலான் வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள மசூதியில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கூடி தொழுகையில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமிய மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக, மசூதியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மீது இந்துக்கள் மலர்களை தூவி ரமலான் வாழ்த்து தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.