அடுத்த 5 ஆண்டுகளில் இன்னும் 85 ஆயிரம் மருத்துவ படிப்புக்கான இடங்கள் சேர்க்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம், ஹிசாரில் உள்ள மகாராஜா அக்ரசென் மருத்துவக் கல்லூரிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தந்தார். அப்போது மருத்துவக் கல்லூரி விடுதி, ஐசியூ ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டியதுடன், மகாராஜா அக்ரசென்னின் பிரம்மாண்ட சிலையையும் அவர் திறந்து வைத்தார்.
பின்னர் பேசிய அவர், மோடி அரசு 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமைக் கோட்டிலிருந்து மீட்டுள்ளது எனவும், அவர்களுக்குத் தங்குமிடம் வழங்க நான்கு கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன எனவும் கூறினார்.
முன்பு மருத்துவ மாணவர்களுக்கு 51 ஆயிரம் இடங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது அது 1 லட்சத்து 15 ஆயிரம் இடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமித்ஷா கூறினார். மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் 85 ஆயிரம் இடங்கள் சேர்க்கப்படும் எனவும் கூறினார்.
ஹரியானாவில் முன்னர் சாதிய வேறுபாட்டால் அரசு வேலைகள் வழங்குவதில் ஊழல் நடைபெற்றதாகவும் பாஜக ஆட்சியில் ஹரியானாவில் 80 ஆயிரம் வேலைகளை வழங்கி சாதி அடிப்படையில் அரசியல் செய்யப்படுவதில்லை என்பது நிரூபிக்கப்பட்டது எனவும் அமித்ஷா தெரிவித்தார்.