கோவையில் தன்னார்வ தொண்டு அமைப்புகள் இலவசமாக நடத்தும் நீட் பயிற்சி மையத்தில், 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இணைந்து ஆர்வத்துடன் பயின்று வருகின்றனர்.
கோவை ராம்நகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில், சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரம், ஏக்கம் அமைப்பு, சேவா இண்டர்நேஷ்னல் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு அமைப்புகள் இணைந்து கற்க கசடற என்ற பெயரில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றன. அனைத்து பாடங்களிலும் நிபுணத்துவம் பெற்ற 6 ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டுச் சோதனை முறையில் தொடங்கப்பட்ட இந்தப் பயிற்சி வகுப்புகளில், 13 பேர் இணைந்து பயிற்சி பெற்று அதில் 4 பேர் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்தனர். இந்நிலையில், 2-வது ஆண்டாகத் தொடங்கியுள்ள நீட் பயிற்சி வகுப்புகளில், கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பயின்று வருகின்றனர்.
அவர்களுக்கு உணவு மற்றும் சிற்றுண்டிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மார்ச் 2-ம் தேதி தொடங்கிய வகுப்புகள் மே 2-ம் தேதி வரை நடைபெறும் எனவும், இந்த ஆண்டு தங்கள் மையத்தில் பயிலும் அனைத்து மாணவர்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள் என்றும் நீட் பயிற்சி மையத்தின் இயக்குநர் லதா சுந்தரம் தெரிவித்துள்ளார்.