வாணியம்பாடியில் தொழிலதிபரின் மகன் மற்றும் மைத்துனரை மர்ம கும்பல் காரில் கடத்த முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ரவி. இவருக்குச் சொந்தமான தொழிற்சாலையிலிருந்த அவரது மகன் சதீஷ் மற்றும் மைத்துனர் ராஜி ஆகிய இருவரையும் திடீரென தொழிற்சாலைக்குள் நுழைந்த கார் ஒன்றில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் கடத்த முயன்றது.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் கும்பல் காரில் தப்பியது. இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
இது குறித்து தொழிலதிபர் ரவியின் மகன் சதீஷ் அளித்த புகாரின் பேரில் வாணியம்பாடி நகர போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
தொழில் போட்டி காரணமாகக் கடத்த முயற்சித்தனரா? அல்லது பணம் பறிக்கும் நோக்கில் கடத்த முயற்சிக்கப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.