தூத்துக்குடி அருகே வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் கட்டப்பட்ட 8 ஆண்டுகளிலேயே குடியிருக்கத் தகுதி இல்லாமல் போன நிலையில் மாற்று வீடுகள் வழங்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட கோமஸ்புரத்தில் அமைந்துள்ள ராஜீவ்காந்தி குடியிருப்பு காலனியில் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக 444 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டன.
தற்போது இந்தக் குடியிருப்புகளில் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள வீடுகள் கட்டப்பட்டு 8 ஆண்டுகள் கூட முழுமை அடையாத நிலையில் அதில் வசிப்பவர்களை காலி செய்யச் சொல்லி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
குடியிருப்பதற்குத் தகுதி இல்லாத நிலையில் வீடுகள் உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த குடியிருப்பு வாசிகள் தங்களுக்கு மாற்று வீடுகள் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.