மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே சின்ன இலந்தைகுளம் கிராமத்தில் குடிநீர் கேட்டு 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோர் நேரில் வர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்த வந்த அலங்காநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஊராட்சி செயலர் மீது குற்றம் சாட்டிய பொதுமக்கள் அதற்கான ஆடியோ ஆதாரங்களையும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் காண்பித்தனர்.
இந்நிலையில் குடிநீர் வழங்க உடனடியாக ஏற்பாடு செய்யப்படும் எனவும் ஊராட்சி செயலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி அளித்த பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.