அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது தொடரப்பட்ட வழக்குகளின் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீதான 20க்கும் மேற்பட்ட வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் அமர்வில் விசாரணை வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில், ஞானசேகரன் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும், ஆளும் கட்சிக்கு தொடர்புடைய நபர் என்பதால் வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஞானசேகரன் வழக்கில் நீதிமன்ற உத்தரவின்படி சிறப்பு புலானாய்வு குழு விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ஞானசேகரன் மீது என்னென்ன வழக்குகள் நிலுவையில் உள்ளன என கேள்வி எழுப்பினார். ஞானசேகர் மீதான அனைத்து வழக்குகளின் விவரங்களையும் தமிழக அரசு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.