அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்யப்பட்டது.
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை சட்ட விரோதமானது என அறிவிக்க கோரி தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில், வழக்கு விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்ற கோரி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் விஜயன் முறையிட்டுள்ளார்.
அதில், வழக்கை விசாரிக்கும் நீதிபதி கே.ராஜசேகர், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞரின் சகோதரர் என்றும், எனவே, தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டும் எனவும் முறையிட்டுள்ளார்.
இது சம்பந்தமாக நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமையிலான அமர்வில் முறையிடும்படி அறிவுறுத்திய தலைமை நீதிபதி அமர்வு, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் தலைமையிலான அமர்வு எடுக்கும் முடிவின் அடிப்படையில் நிர்வாக உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளது.