வக்ஃபு வாரியத்தின் பெயரில் தவறுதலாக நிலங்கள் பதிவு செய்யப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் புதன் கிழமை நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநிலங்களவையில் நேற்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மசோதா தொடர்பாக பல்வேறு கட்சி உறுப்பினர்களும் கருத்து தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அப்போது, ஆயிரத்து 800 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ சந்திரசேகரர் சுவாமி கோயில் உள்ள திருச்செந்துறையில், 408 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரியதாக ஆனது எப்படி எனக் கேள்வி எழுப்பினார்.
நிலங்களை வக்ஃபு வாரியத்தின் பெயரில் தவறுதலாகப் பதிவு செய்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியதாகவும் தெரிவித்தார்.
கிராம மக்கள் தங்களுக்குள் நிலம் வாங்கும்போதும், விற்கும்போதும் வக்ஃபு வாரியத்திடம் தடையில்லாச் சான்றிதழைப் பெற வேண்டும் என்ற நிலை இருந்ததாகச் சுட்டிக்காட்டிய அவர், தவறாகப் பதிவு செய்யப்பட்ட நிலங்களுக்கு NOC கேட்கும்போது அந்த நிலங்கள் தங்களுக்குச் சொந்தமானது இல்லை என வக்ஃபு வாரியத்தால் கூற முடியவில்லையா? எனக் கேள்வி எழுப்பினார்.
இந்த தவறால் கிராம மக்கள் பதிவு அலுவலகத்திற்கும் வக்ஃபு வாரியத்திற்கும் அலைந்து கொண்டிருப்பதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.