மணிப்பூர் கலவரம் தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், அந்த கூட்டுக் கூட்டம் டெல்லியில் நடைபெறும் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஒப்புதல் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் சட்டப்பூர்வ தீர்மானத்தை முன்மொழிந்தார்.
அப்போது பேசிய அவர், இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் மணிப்பூர் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு காரணமாகவே இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை மணிப்பூரில் எந்த வன்முறையும் ஏற்படவில்லை எனக் கூறிய அவர், முந்தைய ஆட்சிக்காலங்களில் நடந்த பல்வேறு வன்முறைச் சம்பவங்களைப் பட்டியலிட்டார்.
மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும், இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தினார்.
மேலும், மணிப்பூர் கலவரம் தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், அந்த கூட்டுக் கூட்டம் டெல்லியில் நடைபெறும் எனவும் அமித்ஷா தெரிவித்தார். இதனை அடுத்து மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.