எம்புரான் திரைப்படத்தில் இடம்பெற்ற முல்லைப்பெரியாறு அணை தொடர்பான சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டதாக, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் எம்புரான் திரைப்படம் தொடர்பாகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது பேசிய அவர், எம்புரான் திரைப்படத்தில் முல்லைப் பெரியாறு அணை பேராபத்தை விளைவுக்கும் அணை எனவும், அணை உடைந்தால் கேரளா அழியும் எனவும் வசனம் இடம்பெற்றிருப்பதாகக் குற்றம்சாட்டினார்.
அதற்குப் பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், எம்புரான் திரைப்படத்தைப் பார்க்கவில்லை என்றாலும், அதனைப் பார்த்தவர்கள் சொல்வதைக் கேட்கும்போது கோபமும் அச்சமும் ஏற்படுவதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், சென்சாரில் நீக்கம் செய்யப்படாத அந்த குறிப்பிட்ட காட்சிகள், தற்போது நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.