சாதி வாரிக் கணக்கெடுப்பு தொடர்பாகச் சட்டப்பேரவையில் திமுக, அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் எந்தவித தடையும் இல்லை என்பதால், அதனை உடனடியாக நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ரகுபதி, சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு எதிர்க்கவில்லை என்றும், சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த முடியும் எனவும் கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய தளவாய் சுந்தரம், 69 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் பாதகமான தீர்ப்பு வராமல் இருக்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியமானது என்றும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் தமிழக அரசுக்கு என்ன கஷ்டம் எனவும் வினவினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, பல ஆண்டு காலம் ஆட்சியிலிருந்த அதிமுக ஏன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவில்லை என கேள்வி எழுப்பினார்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டதாக தளவாய் சுந்தரம் தெரிவித்தார். அதற்கு, தேர்தலுக்காக மட்டுமே அந்த ஆணையம் அமைக்கப்பட்டதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டினார்.
இதனை தொடர்ந்து இருதரப்புக்கு இடையே வாக்குவாதம் முற்றியதால், இத்துடன் விவாதத்தை முடித்துக் கொள்ளுமாறு சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்தினார்.