ஆன்லைன் ரம்மியால் தனிநபர் மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகமும் பாதிக்கப்படுவதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறைச் சட்டம் விதிகளுக்கு எதிராக விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது
அப்போது தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ஆன்லைன் ரம்மி விளையாடுவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியதாக சுட்டிக்காட்டினார்.
18 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆன்லைன் ரம்மி விளையாடக்கூடாது என்பதற்காகவே ஆதார் எண் கேட்கப்படுவதாகவும் விளக்கம் அளித்தார்.
ஆன்லைன் ரம்மியால் தனிநபர் மட்டுமின்றி ஒட்டுமொத்த குடும்பமும், சமூகமும் பாதிக்கப்படுவதாகக் கூறிய அரசு வழக்கறிஞர், கேண்டி க்ரஷ் உள்ளிட்ட விளையாட்டுகளுடன் ஆன்லைன் ரம்மியை ஒப்பிடுவது தவறு எனவும் தெரிவித்தார். நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளை கேட்ட பிறகே ஒழுங்குபடுத்தும் விதிகள் கொண்டு வரப்பட்டதாகவும் வாதிட்டார்.
தொடர்ந்து தமிழக அரசின் வாதம் நிறைவடைந்த நிலையில், ஆன்லைன் நிறுவனங்களின் வாதத்திற்காக விசாரணையை வரும் 7-ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.