சென்னை மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரியாக இருந்த சதீஷ்குமார் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த திடீர் பணியிட மாற்றத்திற்கான காரணம் என்ன ? அதன் பின்னணியில் இருக்கும் காரணங்கள் என்ன என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
சோதனை எனும் பெயரில் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் சோதனை நடத்தி கடைக்குச் சீல் வைப்பதையும், அதிகளவிலான அபராதத்தையும் விதிப்பதையுமே வாடிக்கையாகக் கொண்டிருப்பவர் தான் இந்த உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஸ்குமார். ஒவ்வொரு முறை ஆய்வுக்குச் செல்லும் போதும் தொலைக்காட்சி ஊடகங்களை உடனே அழைத்துச் செல்வதை வழக்கமான நடைமுறையாகக் கொண்டிருக்கும் சதீஷ்குமாருக்கு, பின்னாளில் அதுவே பிரச்சனையாக அமைந்திருக்கிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் எந்தவித முன் அனுமதியுமின்றி திடீரென வடபழனி முருகன் கோயிலில் நுழைந்து பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதத்தை ஆய்வு செய்ததோடு, அது தரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதாகக் கூறி 15 லட்சம் மதிப்பிலான பிரசாதத்தையும் பறிமுதல் செய்தது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சதீஷ்குமாரின் இந்த நடவடிக்கை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சென்னையில் துறை சார்ந்து இரண்டு அமைச்சர்கள் இருக்கும் போது அவர்களிடம் முன் அனுமதி பெறாமல் ஊடகங்களை அழைத்துச் சென்று ஆய்வு நடத்திய சதீஷ்குமாருக்கு மறைமுகமான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
கோடைக் காலம் தொடங்கியிருக்கும் நிலையில் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் தர்பூசணி பழத்தின் விற்பனை களைக்கட்டத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தர்பூசணிகளில் செயற்கை நிறமூட்டிகள் ஊசி மூலம் செலுத்தப்படுவதாகக் கூறி சதீஷ்குமார் வெளியிட்ட வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 80 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு தற்போது விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ள தர்பூசணி பழம் குறித்த சதீஷ்குமாரின் பேச்சு விவசாயிகள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
தர்பூசணி பழங்களை வாங்கவே பொதுமக்கள் தயக்கம் காட்டிய நிலையில், சென்னையில் ஒரு சில இடங்களில் மட்டும் கெட்டுப்போன பழங்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டதாகவும், தர்பூசணி விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு எதிரானவன் தாம் அல்ல என்றும் சதீஷ்குமார் விளக்கமளித்த நிலையில் அந்த பிரச்சனை ஓரளவு ஓய்ந்தது.
சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பிரபல உணவகமான பிலால் உணவகத்தில் அண்மையில் உணவருந்திய 20க்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அங்கு ஆய்வு நடத்திய சதீஷ்குமார் தலைமையிலான உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகத்தைப் பூட்டி சீல் வைத்தனர்.
அதன் தொடர்ச்சியாகச் சென்னை அண்ணாசாலை பிலால் உணவகத்திலும் அதே புகார் எழுந்த நிலையில், அங்கும் சதீஷ்குமார் ஆய்வுக்காகச் சென்றார். அப்போது திடீரென தொலைப்பேசி அழைப்பு ஒன்று வர, ஆய்வுக்காக வந்த சதீஷ்குமார் உடல்நலக்குறைவு எனக்கூறி ஆய்வை செய்யாமலேயே திரும்பினார். அந்த தொலைப்பேசி அழைப்பு எங்கிருந்து வந்தது ? அந்த தொலைப்பேசி உரையாடலில் நடந்தது என்ன ? என்பது தற்போது வரை மர்மமாகவே இருக்கிறது.
இதற்கிடையில் தான் யாரும் எதிர்பாராத வகையில் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார், திடீரென பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட அமைச்சர்கள் மா சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபுவை மீறி சோதனை, தண்ணீர் பழம் குறித்த சர்ச்சை என சதீஷ்குமாரின் பணியிடமாற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், பிலால் உணவகத்தில் மேற்கொண்ட ஆய்வே பிரதான காரணம் என்பது தெரியவந்துள்ளது.
சோதனை எனும் பெயரில் தெருவோரக் கடைகள், சிறு வணிகர்களின் கடைகளுக்குச் சென்று ஆய்வு நடத்தி சீல் வைப்பதையும், அபராதம் விதிப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கும் உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள், பிலால் போன்ற பெரிய உணவகத்தில் கைவைத்தால் என்ன நடக்கும் என்பதையே சதீஷ்குமாரின் பணியிடமாற்றம் தெள்ளத்தெளிவாக விளக்குகிறது.