ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தனித் தீவாக இருந்த ராமேஸ்வரத்தை மண்டபத்துடன் இணைக்கும் வகையில் 1914ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கடலுக்கு மத்தியில் கட்டப்பட்ட 2 ஆயிரத்து 50 மீட்டர் ரயில் பாலம், படிப்படியாக உறுதித்தன்மையை இழந்ததால் 550 ரூபாய் கோடி மதிப்பில் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டது.
பாலத்தின் கட்டுமான பணிகள் கடந்தாண்டு டிசம்பர் மாதம் முடிவடைந்த நிலையில், ரயில்களை இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டு போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இதனைத் தொடர்ந்து, ராமேஸ்வரம் – தாம்பரம் இடையேயான பாம்பன் விரைவு புதிய ரயில் சேவையைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
பாம்பனில் இருந்து ராமேஸ்வரத்துக்கு ரயில்வே பணியாளர்கள் மற்றும் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு முதல் ரயில் பாம்பன் பாலத்தில் சென்றது.
இதனை அடுத்து, 72 மீட்டர் உயரமுள்ள தூக்குப்பாலம் மேல்நோக்கி உயர்ந்து செல்ல கடலோர காவல் படையின் ரோந்து கப்பல்கள் ரயில் பாலத்தைக் கடந்து சென்றன. அப்போது, கப்பலில் இருந்த கடலோர காவல் படையினர் தேசியக்கொடியை அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
முன்னதாக, இலங்கையின் அனுராதபுரத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.