முந்தைய காங்கிரஸ் அரசை விட 3 மடங்கு அதிக நிதியை தாங்கள் தமிழகத்திற்கு வழங்கியுள்ளபோதும், சிலர் நிதி வேண்டும் நிதி வேண்டும் என அழுதுகொண்டே இருப்பதாகப் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் 8 ஆயிரத்து 300 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு ரயில்வே மற்றும் சாலைத் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டி வைத்தார். மேலும், நிறைவடைந்த திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
குறிப்பாக, வாலாஜாபேட்டை – ராணிப்பேட்டை பகுதியில் 4 வழிச்சாலை அமைக்கப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மேலும், விழுப்புரம் – புதுவை, பூண்டியன்குப்பம் – சட்டநாதபுரம், சோழபுரம் – தஞ்சை வழித்தடத்தில் முடிவுற்ற 4 வழிச்சாலைகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழில் அன்பு சொந்தங்களே எனக்கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியை விட 3 மடங்கு அதிக நிதியை மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
இருந்தாலும் சிலர் தமிழகத்திற்கு நிதி வேண்டும் என அழுதுகொண்டே இருப்பதாக விமர்சித்தார். 2014ம் ஆண்டு தமிழகத்திற்கு 900 கோடி ரூபாயாக இருந்த ரயில்வே திட்ட நிதி தற்போது 6 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசின் முயற்சியால் இதுவரை 3 ஆயிரத்து 700 மீனவர்களுக்கு மேல் இலங்கையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
இது பாரத ரத்னா அப்துல் கலாம் அவர்களின் பூமி. ராமேஸ்வரம் வரையிலான புதிய பாம்பன் பாலம் பாரம்பரியத்தையும், தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைத்துள்ளது. ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு நகரத்தை, 21ஆம் நூற்றாண்டின் பொறியியல் அதிசயத்தின் மூலம் இணைத்திருக்கிறோம் என்று பிரதமர் மோடி கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தமிழகத்திலிருந்து தனக்கு வரும் கடிதங்களில் கையொப்பம் கூட தமிழில் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலினை மறைமுகமாகக் குறிப்பிட்டார். தமிழ், தமிழ் என்று பேசுபவர்கள் தமிழில் கையெழுத்து கூட போடுவதில்லை என்பது ஆச்சரியம் அளிப்பதாகவும் அவர் கூறினார்.
மருத்துவ கல்வியை தமிழில் அளிக்க வேண்டும் என்றும் தமிழ் மொழியும், தமிழ் மரபும் உலகெங்கும் சென்று சேர வேண்டும் எனக் கூறிய பிரதமர், பாஜகவின் நிறுவன நாளில் சக்தி படைத்த பாரதம் என்ற லட்சியத்தை மனதில் தாங்கி பயணிப்பதாகத் தெரிவித்தார்.