காவிரியில் தமிழகத்துக்கான உரிமைகளை வழங்கினால் மட்டுமே காங்கிரஸ் உடன் கூட்டணி என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிக்கத் தயாரா என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
நீலகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நீட் விலக்கு அளித்தால் மட்டுமே பாஜக உடன் கூட்டணி என எடப்பாடி பழனிசாமி அறிவிக்கத் தயாரா எனச் சவால் விடுத்தார்.
இதற்கு அதிமுக எக்ஸ் தள பக்கம் மூலம் பதிலளித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் கூட்டணி மற்றும் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்ன அக்கறை என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆடு நனைகிறதே என இந்த ஓநாய் அழுவது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி, காவிரியில் தமிழகத்துக்கான உரிமைகளை வழங்கினால் மட்டுமே காங்கிரஸ் உடன் கூட்டணி என ஸ்டாலின் அறிவிக்கத் தயாரா எனவும வினாவியுள்ளார்.
மாநில உரிமைகள் பற்றி பேச ஸ்டாலினுக்கோ, திமுகவுக்கோ கொஞ்சமாவது மனசாட்சி இருக்கிறதா எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், நீட் தேர்வு விவகாரத்தைவிட மாணவர்களுக்குத் திமுக செய்யக்கூடிய மாபெரும் துரோகம் எதாவது உள்ளதா எனவும் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.