பிரதமரை விமர்சித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ப.சிதம்பரத்தைக் குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தேசிய ஜனநாயக கூட்டணியினரின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர்கள் முன்னிலையில் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிதி பங்கீடு குறித்து விரிவாகப் பேசியதாகத் தெரிவித்துள்ளார்.
இதனை ஒப்புக்கொள்ளப் பயந்து பிரதமர் பங்கேற்ற நிகழ்ச்சியைப் புறக்கணித்த முதலமைச்சர் ஸ்டாலின் ஊட்டிக்குச் சென்று ஓய்வெடுத்த சமயத்தில், ராமேஸ்வரத்தில் 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேலான வளர்ச்சி பணிகளைப் பிரதமர் மோடி துவக்கி வைத்திருப்பதாகவும் தமிழிசை சௌந்தரராஜன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ராமேஸ்வரம் மீனவர்களின் நலன் காக்கச் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளதாகவும், இலங்கை மண்ணிலிருந்து இந்தியாவின் பாதுகாப்பிற்கு எந்தவித அச்சுறுத்தலும் இருக்காது என்ற உத்தரவாதத்தையும் அவர் பெற்று வந்துள்ளதாகவும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சாதனையை நிகழ்த்திவிட்டு தமிழகம் வந்த பிரதமரை முதலமைச்சர் ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் சந்தித்து வரவேற்காமல் இருந்தது ஒரு வரலாற்றுத் தவறு எனக் குறிப்பிட்டுள்ள அவர், பிரதமரை ப.சிதம்பரம் உள்ளிட்டோர் விமர்சிப்பது தேர்தல் சமயத்தில் அறிவாலயம் வாயிலில் நின்று, ஒருசில எம்.பி இடங்களை பெறுவதற்கான அவர்களின் நோக்கத்தை அம்பலப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, இந்தியாவில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, பொருளாதார வளர்ச்சி மிக உயர்ந்திருப்பதாகப் பெருமை பேசும் முதலமைச்சர் ஸ்டாலின், உலக அரங்கில் பிரதமர் நரேந்திர மோடி பெற்ற நல்லெண்ணம் மற்றும் ஆதரவுதான் அதற்குக் காரணம் என்பதைக் கூற மறந்துவிடுவதாகத் தெரிவித்துள்ள தமிழிசை சௌந்தரராஜன், இந்த மண்ணை அப்துல் கலாமின் ஆன்மிக பிறப்பிடம் என்று பாராட்டிய பிரதமருக்கு நன்றி சோல்ல மறக்கும் இந்த அரசு உண்மையில் ஒரு இருண்ட ஆட்சி என்றும் காட்டமாக விமர்சித்துள்ளார்.