திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாசி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கையாக 3 கோடியே 79 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குத் தமிழகம் மட்டும் இன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் வருகின்றனர்.
குறிப்பாக, பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வதற்காக வருகை தருகின்றனர்.
அவர்கள் பணம், தங்கம், வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகளை உண்டியல் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். இந்த நிலையில், கடந்த மாசி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.
இதில், 3 கோடியே 79 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணமும், 225 கிராம் தங்கமும், 1 கிலோ 765 கிராம் வெள்ளியும் காணிக்கையாகக் கிடைத்துள்ளன.