அம்பாசமுத்திரம் அருகே நடைபாதையில் உள்ள கழிவுநீர் கால்வாயின் மூடி துருப்பிடித்து உடைந்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் வடக்கு ரத வீதியில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் செல்வதற்காக நடைபாதைக்குக் கீழே கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கால்வாய் மீது போடப்பட்டிருந்த மூடி தற்போது துருப்பிடித்துச் சேதமடைந்து காணப்படுகிறது.
இதனால், அவ்வழியாக மாணவர்கள், முதியவர்கள் நடந்து செல்வதற்கே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் 2 முறை குழந்தைகளின் கால் மூடியில் உள்ள துவாரத்தில் சிக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன்பு கழிவுநீர் கால்வாயின் மூடியை மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.