அரசியல் சாசன விதிகளுக்கு உட்பட்டே ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்திருப்பதாகத் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
மசோதாவை நிறுத்தி வைப்பதாக வெறுமனே அறிவிக்க ஆளுநருக்கு எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், சட்டமன்றத்தில் 2வது முறையாக நிறைவேற்றப்பட்ட மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிவைக்க முடியாது எனத் தெரிவித்தனர்.
2 மசோதாக்களும் வேறுபட்டால் மட்டுமே அதனைக் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைக்க முடியும் எனக்கூறிய நீதிபதிகள், மாநில அரசு அனுப்பும் மசோதா மீது அதிகபட்சம் 3 மாதங்களுக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
மாநில அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், 10 மசோதாக்களைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய நடவடிக்கை செல்லாது என உத்தரவிட்டனர்.
மேலும் தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களும் சட்டமாக நடைமுறைக்கு வந்துவிட்டது எனவும் உத்தரவிட்டனர்.