அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இறக்குமதி வரிகளுக்குப் பதிலடியாக, ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் தங்கள் உலகளாவிய உற்பத்தியில் பெரும் பகுதியை இந்தியாவிற்கு மாற்றுவது குறித்துப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்காவில் இறக்குமதியாகும் சீன தயாரிப்புகளுக்கு 54 சதவீத வரியையும், வியட்நாம் பொருட்களுக்கு 46 சதவீத வரியையும், இந்தியாவுக்கு 26 சதவீத வரியையும் ட்ரம்ப் விதித்துள்ளார். இதன் மூலம், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கான உற்பத்தி தளமாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இந்த ஆண்டு ஸ்மார்ட் போன் ஏற்றுமதி கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரித்து 1,50,000 கோடியை எட்டியது. இது கடந்த ஆண்டை விட இருமடங்கு அதிகமாகும். இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் சுமார் 94 சதவீதம் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களே வைத்துள்ளன.
ட்ரம்பின் வரி விதிப்பால், இரு நிறுவனங்களும் தங்கள் உலகளாவிய உற்பத்தியில் பெரும் பகுதியை இந்தியாவுக்கு மாற்றுவது குறித்து பரிசீலனை செய்து வருகின்றன.
ஆப்பிள் நீண்ட காலமாகவே, இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்து வருகிறது. ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா நிறுவனத்தால் இந்தியாவில் ஐபோன்கள் தயாரிக்கப் படுகின்றன. மேலும், ஐபோன் தயாரிக்கும் விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் ஆகிய தைவான் நிறுவனங்களையும் டாடா வாங்கியுள்ளது.
சீனாவில் இருந்து உற்பத்தியை மாற்ற முடிவெடுத்திருக்கும் ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் பெரிய உற்பத்தி விரிவாக்கத்தில் இறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுக்குப் பரஸ்பர வரி குறைவாக உள்ளது என்றாலும், ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் இந்தியாவில் தான் முதலீடு செய்யும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, நீண்ட காலமாகவே, உற்பத்திக்கு வியட்நாமை நம்பியிருக்கும் சாம்சங், புதிய பரஸ்பர வரியால் அதிகம் பாதிக்கப் பட்டுள்ளது. வியட்நாமில் இருந்து சுமார் 55 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஸ்மார்ட் போன்களை சாம்சங் ஏற்றுமதி செய்கிறது.
ஏற்கெனவே, கேலக்ஸி S25 மற்றும் ஃபோல்ட் போன்ற முக்கிய மாடல்களை சாம்சங் இந்தியாவில்தான் உற்பத்தி செய்கிறது. வியட்நாமை விட இந்தியாவுக்குக் குறைந்த வரி என்பதால், சாம்சங் நிறுவனமும் ,இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகளைச் சேமிக்க ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் சாம்சங் கேலக்ஸி S25 போன்ற ஸ்மார்ட் போன்களின் விலை அமெரிக்காவில் 43 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது.
உலகின் முன்னணி தொழில் நுட்ப நிறுவனங்கள் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் தங்கள் உற்பத்தி தளத்தை இந்தியாவுக்கு மாற்றி வருகின்றன. 2026 ஆம் ஆண்டுக்குள் 300 பில்லியன் டாலர் ஆண்டு உற்பத்தியை இலக்காகக் கொண்டுள்ள இந்தியாவுக்கு .ட்ரம்பின் வரி கொள்கை நன்மையாகவே முடிந்துள்ளது.