நீலகிரியில் வாகன கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை உரியத் தரவுகளோடு மனுவாகத் தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.
வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களையும், வார இறுதியில் 8 ஆயிரம் வாகனங்களையும் மட்டுமே உதகைக்குச் செல்ல அனுமதிக்க வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டது.
இதனால், உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆகவே உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டுமெனவும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவானது நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வாகன கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள், வாகன கட்டுப்பாட்டை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை உரியத் தரவுகளோடு மனுவாகத் தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.