கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்றி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தொழிலாளர்கள் தற்போது உயிரோடு இருப்பதாக மருத்துவச் சான்றிதழ் வழங்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் ஆயிரம் மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகள் தற்போது செயல்பாட்டில் உள்ளன. இங்கு, அலுவலகங்கள், அணு உலை கட்டுமான பணிகளில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் பணியில் சேர உடல் தகுதி மருத்துவச் சான்றிதழ் தேவைப்படுகிறது. அதனைக் கூடங்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்களிடம் பெறுகின்றனர்.
இந்த நிலையில், பெண் மருத்துவர் ஒருவர் போலியான சான்றிதழ்கள் வழங்குவதாகவும், குறிப்பாகத் தற்கொலை செய்து கொண்ட ஜிஜேந்திர பால், குல்சன் குமார் ஆகியோருக்கு இறந்த பிறகு மருத்துவச் சான்றிதழ் வழங்கியதாகவும் புகார் எழுந்தது.
இறந்த நபர்களுக்குப் போலி மருத்துவ சான்றிதழ் தரப்பட்டதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்தி வருவதாக நெல்லை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஹேமலதா தெரிவித்துள்ளார்.