பாம்பன் பாலமா? திராவிட மாடல் பாலமா ? எது பெரியது என்பது தொடர்பாகச் சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், திமுக அமைச்சரிடையே காரசார விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் பேசிய பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், தமிழகத்தில் வேலைக்காக இளைஞர்களும், வேலைவாய்ப்பு வழங்க நிறுவனங்களும் தயாராக இருப்பதாகவும், மாணவர்களின் தொழில் பயிற்சி திறனை அதிகரிக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதற்கு, நான் முதல்வன் திட்டம் இணைப்பு பாலம் என அமைச்சர் பதிலளித்திருப்பதாகச் சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டார். அந்த இணைப்பு பாலம் வலுவாக இருக்க வேண்டும் என்று தெரிவித்த வானதிக்கு, அது பாம்பன் பாலம் போல இருக்காது என்றும், திராவிட மாடல் பாலம் போல் தரமாகவும், உறுதியாகவும் இருக்கும் என்றும் அமைச்சர் சிவசங்கர் பதிலளித்தார்.
பின்னர் பேசிய வானதி, இந்தியத் தொழில் நுட்பத்தில் இந்தியப் பொறியாளர்களின் உழைப்பால் பாம்பன் பாலம் உருவாக்கப்பட்டதாகவும், திமுகவின் சித்தாந்தத்தைக் குறிப்பிடுவதாகக்கூறி, இந்தியர்களின் பணியைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் பதிலளித்தார்.