தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நிறுவன நேர்காணலில் பங்கேற்று பேசிய அமித்ஷா, வாக்கு அரசியலுக்காக திமுக தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாக விமர்சித்தார்.
ஊழலை மறைப்பதற்காகவே தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் ஸ்டாலின் அரசு நாடகம் ஆடுவதாக குற்றம் சாட்டிய அவர், தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், தொகுதி மறுவரையறைக்காக எந்த நடவடிக்கையையும் இதுவரை தொடங்கவில்லை எனவும் கூறினார்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை தென்மாநில அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள மறுப்பதாக கூறிய அவர், ‘Pro-Rata’ அடிப்படையில் மேற்கொள்ளப்படும் என்பதால் தொகுதிகளில் எண்ணிக்கை குறையாது என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
மேலும் இந்தியை முதன்மையாக செயல்படுத்தவில்லை என்றும், அனைத்து மொழிகளையும் மத்திய அரசு ஒன்றாக தான் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் ஆட்சியில் இந்தி, ஆங்கிலம் தவிர எந்த மொழிகளிலும் UPSC தேர்வுகள் நடைபெறவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர், UPSC தேர்வுகளில் தமிழ், மலையாளம், குஜராத்தி உள்ளிட்ட மொழிகளை கொண்டு வந்தது பாஜக அரசுதான் என பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் திமுகவின் ஒரு தலைவருக்கு கூட தமிழில் கையெழுத்து போட தெரியாது என விமர்சித்த அமித்ஷா, தமிழகம், பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என உறுதிபட தெரிவித்தார்.