மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அவரது குடும்பத்தினரை விடுவித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டியன் ஆறுமுகம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மீது 2004ல் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சேலம் நீதிமன்றம், அனைவரையும் விடுவித்து கடந்த 2006ஆம் ஆண்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோது 2012 ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணமடைந்தார்.
இதனை அடுத்து, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மற்றவர்களை விடுவித்தது சரி எனக்கூறி, அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்குகளை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவி, மகள், மகன், மருமகள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர்களை வழக்கில் இருந்து விடுவித்தது தவறு எனக் கூறி, சேலம் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து, சாட்சி விசாரணையை துவங்கும்படி சேலம் நீதிமன்றத்துக்கு நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.