மயிலம் முருகன் கோயிலில் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் மலைப் பகுதியில் அமைந்துள்ள முருகன் கோயிலில் கடந்த 15ஆம் தேதி பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாள்தோறும் முருகப் பெருமானுக்கு அபிஷேக ஆராதனையும் நடைபெற்ற நிலையில், பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இந்நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் வெகு விமரிசையுடன் நடைபெற்றது.
வள்ளி, தெய்வானையுடன் பெரிய தேரில் முருகப் பெருமான் எழுந்தருளிய நிலையில், அதிகாலை 5.45 மணியளவில் மயிலம் பொம்மபுர ஆதீனம் தேரை வடம் பிடித்து இழுத்துத் தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். மலையைச் சுற்றி வந்தபோது விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த பொருட்கள் தேர் மீது இறைத்து வழிபட்டனர்.