கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே தண்டவாளம் அமைக்கும் பணியின் போது மண்சரிவு ஏற்பட்டதால் 3 மணி நேரமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
நாகர்கோவில் – நெல்லை இடையே பழைய ஆற்றின் அருகில் ரயில்வே இருப்புப் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தண்டவாளத்தின் அடியில் கான்கிரீட் பிளாக் அமைப்பதற்கான குழி தோண்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது திடீரென மண் சரிவு ஏற்பட்டதால் பணியில் இருந்த 3 ஊழியர்கள் காயமடைந்தனர். இதைக்கண்ட சக பணியாளர்கள் மண் சரிவில் சிக்கிக்கொண்ட நபர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியிலும் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக நாகர்கோவில் – நெல்லை இடையேயான ரயில் சேவைகள் 3 மணி நேரமாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து ரயில்வே இருப்புப் பாதை சீரமைக்கப்பட்டு ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அனைத்து ரயில்களும் வழக்கம்போல் இயக்கப்பட்டன.