சேந்தமங்கலம் அருகே 2 மாணவர்கள் கட்டிவைத்துத் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துக் காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் கூடியதால் பதற்றம் நிலவியது.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே ஜங்களாபுரத்தில் கடந்த 8ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்ற இரு பள்ளி மாணவர்களை பச்சுடையாம்பட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் தாக்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு ஆதரவாக 20க்கும் மேற்பட்டோர் ஜங்களாபுரத்தில் சென்று அங்குள்ளவர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இருதரப்பினர் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இருதரப்பு சார்பில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள 10க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், பள்ளி மாணவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்டவர்களைக் கைது செய்ததாகக் கூறி சேந்தமங்கலம் காவல் நிலையம் முன்பு உறவினர்கள் குவிந்ததால் பதற்றம் நிலவியது.
இது குறித்துத் தகவலறிந்து வந்த காவல் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதி கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.