தமிழகத்தில் வரும் 17ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை கத்திவாக்கத்தில் 6 செ.மீ மழை பதிவாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்துள்ளதாக தெரிவித்துள்ள வானிலை மையம் அதே மத்திய மேற்குவங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்றி நிலவுவதாகவும் தெரிவித்துள்ளது
இதன்காரணமாக வரும் 17ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிமாக இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.