ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கல்யாண விருந்து பரிமாறப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் கடந்த 3ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் அம்பாளுக்கும், ரெங்கமன்னாருக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட நிலையில், பங்குனி உத்திரத்தில் செப்பு தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
இதனை அடுத்து ஆடிப்பூர கொட்டகையில் அலங்கரிக்கப்பட்ட மணப்பந்தலில் ரெங்கமன்னாரும், ஆண்டாளும் எழுந்தருளினர். தொடர்ந்து, பெரியாழ்வார் ஆண்டாளை கன்னிகா தானம் வழங்கும் வைபவம் நடைபெற்றது. இதில் பெரியாழ்வாரின் 225-வது வம்சாவளியான வேதவிரான் பட்டர் சுதர்சனன் ஆண்டாளை ரெங்கமன்னாருக்கு கன்னிகா தானம் செய்து வைத்தார்.
பின்னர், திருப்பதி ஶ்ரீனிவாச பெருமாள் கோயிலில் இருந்து சீதனமாக அனுப்பி வைக்கப்பட்ட பட்டு வஸ்திரம் மற்றும் மங்கள பொருட்கள் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது.
அதன் பின், ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பாலாஜி பட்டர், ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.