போதை மாத்திரை விற்பனை செய்ததாக இந்தியா மார்ட் நிர்வாகிகள் 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அண்மையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே போதைமாத்திரை விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மும்பையில் இருந்து கொரியர் மூலம் போதை மாத்திரை கடத்தப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து அனுப்புநர் முகவரியை வைத்து விசாரணை நடத்தியதில் மும்பையை சேர்ந்த AIPEX WORLDWIDE SURFACE COMPANY என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் இருந்து கொரியர் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மும்பை சென்ற ஸ்ரீபெரும்புதூர் போலீசார், தலைமறைவாக இருந்த அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சதானந்த் பாண்டேவை கைது செய்தனர். அவரை தனி விமானத்தில் அழைத்து வந்து விசாரித்ததில் பல்வேறு மாநிலங்களில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து ஆன்லைன் மூலம் போதை மாத்திரை விற்றது அம்பலமானது.
இந்த சட்டவிரோத செயலுக்கு துணையாக இருந்ததாக ஆன்லைன் விற்பனை தளமான இந்தியா மார்ட் தலைமை செயல் அலுவலர் தினேஷ் சந்திரா அகர்வால் மற்றும் இயக்குநர்கள் 6 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.