அம்பேத்கர் பிறந்தநாளை ஒட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு தலைவர்கள் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கரின் மணிமண்டபத்திற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அம்பேத்கரின் சிலை முன் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் விசிக தலைவர் திருமாவளவன், துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர்.
சேலத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வை ஒட்டி சாலையில் ஏராளமான அதிமுகவினர் திரண்டு எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளித்தனர்.
கோவையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் ஏராளமான கட்சி நிர்வாகிகளும் இணைந்து அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினர்.
சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி, சமத்துவம் நிலைக்க உறுதி ஏற்போம் என தெரிவித்துள்ளார்.