வக்ஃபு சட்டத் திருத்தத்தால் தங்களுக்கு நீதி கிடைத்துள்ளது என்றும், தங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது எனவும், கேரளாவின் முனம்பம் கிராம மக்களும், பெரும்பாலான கேரளத் திருச்சபை கிறிஸ்தவ பாதிரியார்களும், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளனர். வக்ஃபு என்ற ஒற்றை வார்த்தையால் முனம்பம் கிராம மக்கள் தங்கள் உரிமைகளை இழந்தது எப்படி ? புதிய வக்ஃபு சட்டத்திருத்தம் அவர்களை எப்படிக் காப்பாற்றியது என்பது பற்றிய ஒரு செய்தித்தொகுப்பு.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள அழகான கடற்கரை கிராமம் முனம்பம் ஆகும். கொச்சியில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் அரபிக் கடலுக்கும் பெரியார் நதிக்கும் இடையில் இந்த கடலோர கிராமம் அமைந்துள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற செராய் கடற்கரையில் உள்ள இக்கிராமத்தில் 610 குடும்பங்களில் 400 குடும்பங்கள் கிறிஸ்தவர்கள். மீதமுள்ளவர்கள் இந்துக்கள். யாரும் இஸ்லாமியர் அல்ல. மீன்பிடித் தொழில் மற்றும் இறால் வளர்ப்பு இம்மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகின்றன.
கோட்டபுரம் மறைமாவட்டத்தின்கீழ் உள்ள இந்த மீனவ கிராமம், வேளாங்கண்ணி மாதா பேராலயத்தின் தாயகம் என்று சொல்லப்படுகிறது. அரபு மொழியில் வக்ஃபு என்ற சொல்லுக்கு “சிறைப்படுத்தல்” அல்லது “தடை” என்று பொருள். வக்ஃபு என்பது அறக்கட்டளையின்கீழ் வைத்திருக்கும் ஒரு இஸ்லாமியச் சொத்து ஆகும். இது ஒரு தொண்டு அல்லது மத நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
சுமார் 404 ஏக்கர் நிலத்துக்குக் கேரள மாநில வக்ஃபு வாரியம் உரிமை கோரியதுதான் முனம்பம் நிலப் பிரச்சனையின் ஆரம்பப் புள்ளி. 1902ஆம் ஆண்டு திருவிதாங்கூர் அரச குடும்பம் முனம்பத்தில் 404 ஏக்கர் நிலத்தை மட்டஞ்சேரியை சேர்ந்த மசாலா வியாபாரி அப்துல் சத்தார் மூசா சேட்டுக்குக் குத்தகைக்கு வழங்கியது.
பின்னர் இந்நிலம் அவரது மருமகன் சித்திக் சேட்டின் கைகளுக்குச் சென்றது. 1950 ஆம் ஆண்டு சித்திக், கோழிக்கோட்டின் ஃபாரூக் கல்லூரிக்குத் தானமாகக் கொடுத்தார். ஒருகாலத்தில் நிலத்தை முனம்பம் கிராம மீனவ குடும்பங்களுக்குக் கல்லூரி நிர்வாகம் விற்கத் தொடங்கியது. திடீரென்று விற்பனை செல்லாது என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. இந்த சர்ச்சை தொடர்பாகக் கடந்த 2009ஆம் ஆண்டில் கேரள அரசால் நியமிக்கப்பட்ட நிசார் ஆணையம், முனம்பம் நிலம் வக்ஃபு வாரிய சொத்து என்று அறிவித்ததோடு அந்த நிலத்தை மீட்டெடுத்து வக்ஃபு வாரியத்திடம் ஒப்படைக்கவும் பரிந்துரைத்தது.
2019ஆம் ஆண்டில் வக்ஃபு வாரியம் முனம்பம் கிராமத்தில் உள்ள நிலத்தை வக்ஃபு சொத்தாக உரிமை கொண்டாடியது. நீண்ட சட்ட போராட்டத்தின் முடிவில் வரி வசூல் முதலான அனைத்து நிர்வாக பணிகளையும் முறையாக நிறுத்தப் பட்டது. இதனால் சுமார் 400க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் தங்கள் சொந்த நிலத்தின் உரிமையை இழந்தன.
கேரளாவின் வேளாங்கண்ணி மாதா பேராலயத்திற்கு அருகில், 77 வயதான லிஸ்ஸி ஆண்டனி உட்படத் திருச்சபை உறுப்பினர்களும், 1000க்கும் மேற்பட்ட முனம்பம் கிராம மக்களும் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்து, தேவாலய வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐந்து மாதங்களுக்கும் மேலாகப் போராடி வரும் இந்த கிராம மக்களின் கூக்குரல் தேவனின் காதுக்குக் கேட்டதோ இல்லையோ, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் காதில் கேட்டது. அதனால்தான் நாடாளுமன்றத்தில் நடந்த வக்ஃபு சட்டத்திருத்த மசோதா விவாதத்தில் பேசிய அமித்ஷா, “கேரளாவின் கத்தோலிக்க பிஷப்கள் கவுன்சில், இந்தியக் கத்தோலிக்க பிஷப்கள் மாநாடு, கத்தோலிக்க காங்கிரஸ் கேரளா, அகில இந்தியக் கத்தோலிக்க மத குருமார்கள் கவுன்சில் மற்றும் கேரள தேவாலயங்களின் ஐக்கிய கவுன்சில் – இவை அனைத்தும் இம்மசோதாவை ஆதரிப்பதாகக் கூறினார்.
மேலும், 2013ஆம் ஆண்டில் காங்கிரஸ் கொண்டு வந்த வக்ஃபு சட்டம் அநீதியானது என்று கிறிஸ்தவர்கள் கூறியதையும் அமித்ஷா சுட்டிக் காட்டினார். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முனம்பம் கிராம மக்களும், கிறிஸ்தவ பாதிரியார்களும், தேவாலயத்தில் கூடி, தொலைக்காட்சியில் நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
மசோதாவை நிறைவேற்றியபோது, ‘ஜெய் மோடி’, ‘ஜெய் அமித்ஷா’ என்ற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. தேவாலயத்தில் நடந்த கொண்டாட்டத்தில் கேரளா பாஜகவின் மாநிலத் தலைவரான ராஜீவ் சந்திரசேகர் தேவாலயத்துக்குச் சென்று வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
CPM தலைமையிலான LDF மற்றும் காங்கிரஸ் தலைமையிலான UDF இரண்டு கட்சிகளுமே தங்கள் வாழ்வாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காணவில்லை. மாறாக வாக்கு அரசியலுக்காக இஸ்லாமியருக்குச் சாதகமாகவே செயல்பட்டது. இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு மட்டுமேஎல்லோருக்குமான அரசாகச் செயல்படுவதாக முனம்பம் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களின் நீண்ட கால உரிமை பிரச்சனையைத் தீர்த்து வைத்த பிரதமர் மோடியை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கவும் தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, இன்னும் ஓரிரு நாளில், வேளாங்கண்ணி மாதா தேவாலயத்துக்கு வருகை தரும் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவை வரவேற்க முனம்பம் கிராமமே உற்சாகமாகத் தயாராகி வருகிறது.
இந்த பிரமாண்டமான நிகழ்வில் கிராம மக்கள் உட்பட 5,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் வக்ஃபு திருத்தச் சட்டத்துக்குக் கேரள மக்கள் கொடுத்திருக்கும் பேராதரவு, அம்மாநிலத்தில் அரசியல் களம் மாறி வருவதை உணர்த்துகிறது.