கோடைக் கால வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஏராளமான பொதுமக்கள் பனைமர நுங்கை நாடிச் செல்லத் தொடங்கியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் களைக்கட்டும் நுங்கு விற்பனை குறித்தும் அதனால் கிடைக்கும் பலன் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
தமிழகத்தில் கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்பாக பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி செல்சியஸை தாண்டியிருக்கிறது. வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வெளியே செல்வதையே தவிர்க்கும் பொதுமக்கள் தவிர்க்க முடியாத பயணத்தின் போது குளிர்பானங்களை அருந்துவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
பொதுமக்களின் தாகத்தைத் தீர்ப்பதோடு அவர்களின் உடலுக்கு எந்தவித பின் விளைவுகளையும் ஏற்படுத்தாத வகையில் அருமருந்தாக பனைமர நுங்கு அமைந்திருக்கிறது. அடிப்படையிலேயே மருத்துவக் குணம் நிறைந்த நுங்கை உட்கொண்டால் உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்துவதோடு வயிற்று வலி, குடல் புண்களைக் குணப்படுத்தும் மருந்தாகவும் திகழ்கிறது
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உடலில் ஏற்படும் சூட்டைத் தணிக்க இயற்கை கொடுத்த வரமாக எண்ணி பனைமர நுங்கை ஏராளமான பொதுமக்கள் வாங்கி ருசித்து வருகின்றனர்.
சேலம் மாநகரத்து மக்கள் மத்தியில் பனைமர நுங்கிற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பால், ஓமலூர், வாழைப்பாடி, பனமரத்துப்பட்டி, ஆத்தூர், தலைவாசல் என பல்வேறு பகுதிகளிலிருந்து நுங்கு சேலத்திற்குக் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் பனைமரங்கள் படிப்படியாக அழிக்கப்பட்டு, அதன் விளைச்சல் குறைந்து வந்தாலும் மக்கள் மத்தியில் அதற்கான வரவேற்பு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் பொதுமக்கள் வாங்கி உண்ணும் உணவுப்பட்டியல் பனைமர நுங்கு தவிர்க்க முடியாத உணவாக உருவெடுத்திருக்கிறது.