அம்பேத்கரின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டே இந்தியாவில் பாஜக ஆட்சியமைத்து வருவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் ஹிசாரில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, ஹிசார் – அயோத்தி இடையிலான விமானச் சேவையைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து மகாராஜா அக்ரசென் விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இதைத்தொடர்ந்து விழா மேடையில் பேசிய அவர், பாஜக எடுக்கும் அனைத்து முடிவுகளும், திட்டங்களும் அம்பேத்கருக்கு அர்ப்பணிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு இந்தியாவில் 74 விமான நிலையங்கள் இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், இந்த எண்ணிக்கை தற்போது 150-ஆக உயர்ந்திருப்பதாகப் பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், புதிய வக்பு சட்டத்திருத்த மசோதாவால், மாஃபியாக்களின் கொள்ளை நிறுத்தப்படும் என உறுதிப்படத் தெரிவித்தார்.