நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அரசு பேருந்தின் முன்பக்க டயர் கழன்று ஓடிய விவகாரத்தில், ஓட்டுநர், நடத்துநர் உட்பட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ராசிபுரத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சேலம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. திடீரென, பேருந்தின் முன் பக்க டயர் கழன்று ஓடியதால், பயணிகள் பயத்தில் கூச்சலிட்டனர்.
தொடர்ந்து, கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய பேருந்தை, ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டு பாதுகாப்பாக நிறுத்தினார். ஆனால் மாற்று பேருந்து இல்லாததால் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள், மகளிர் விடியல் பயணம் என பெயர் வைத்துக் கொண்டு பேருந்துகளை குறைத்து இயக்குவதோடு, சரியான பராமரிப்பு இல்லாமல் இயக்குவதாக குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், கிளை மேலாளர், ஓட்டுநர், நடத்துநர் உட்பட 7 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.