தமிழக மக்களின் ஒவ்வொரு இல்லங்களிலும் தவிர்க்க முடியாத பொருளாக இருந்த உலக்கை தற்போது அங்கொன்றும், இங்கொன்றுமாக காட்சிப் பொருளாக மாறியிருக்கிறது. உலக்கைத் தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் தொழிலாளர்களைப் பாதுகாக்கத் தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.
சேலம் மாநகரம் கிச்சிப்பாளையத்தில் அமைந்துள்ள மூவேந்தர் நகரில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் பிரதான தொழிலாக அமைந்திருக்கிறது இந்த உலக்கை தயாரிக்கும் தொழில். மூன்று தலைமுறையாக, பரம்பரை பரம்பரையாக உலக்கை தயாரிக்கும் தொழிலாளர்கள் நிரம்பி வழியும் தெருவாகக் காட்சியளிப்பதால் இத்தெருவின் பெயரே உலக்கை தெரு என மாற்றப்பட்டுள்ளது.
கருவேல், வேங்கை, சிலை மரம், செலவகை, நாட்டுக் கருவேலமரம் என பல்வேறு விதமான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் உலக்கைக்குப் பொதுமக்கள் மத்தியில் தனி வரவேற்பு இருந்து வந்தது.
தஞ்சாவூர், திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மரங்கள் வரவழைக்கப்பட்டு, அதன் உறுதித் தன்மையைப் பலமுறை ஆய்வு செய்து, மெருகேற்றிய பின்னரே இந்த உலக்கைகள் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. காலப்போக்கில் மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட நவீன அரவை இயந்திரங்களின் வருகையால் உலக்கைகளின் பயன்பாடு அடியோடு சரியத் தொடங்கியிருக்கிறது.
தமிழகம் முழுவதும் நடைபெறும் பிரசித்தி பெற்ற திருக்கோவில் திருவிழாக்களில் விற்பனைக்காக எடுத்துச் செல்லப்பட்டும் இந்த உலக்கைகளை விரும்பி வாங்கிச் செல்வோரின் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்து வருகிறது.
திருமண விழாக்களின் போதும் இறப்பு வீடுகளில் சம்பிரதாய நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் பொருளாக உலக்கை மாறிவிட்டதாகவும் தயாரிப்பாளர்கள் மிகுந்த வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழர்களின் பண்டைய கால வாழ்க்கை முறைக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் இந்த உலக்கை தயாரிப்பு தொழிலைப் பாதுகாக்க, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படுவதைப் போல வங்கிக்கடன், சலுகை விலையில் தொழிலுக்குத் தேவையான மூலப்பொருட்கள் ஆகியவற்றை வழங்கத் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று உலக்கை தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.