முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டு வந்த மாநில சுயாட்சி தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இது தொடர்பாகச் சட்டப்பேரவையில் பேசிய நயினார் நாகேந்திரன், ஜிஎஸ்டி கூட்டத்தில் அனைத்து மாநில நிதியமைச்சர்களும் கலந்து கொண்டு ஒப்புதல் அளித்த பின்னரே முடிவுகள் எடுக்கப்படுகின்றன என தெரிவித்தார்.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டி நடைமுறையை அனைத்து மாநில முதலமைச்சர்களும் ஏற்றுக் கொண்டதாகவும் கூறினார்.
நீட் தேர்வைப் பொறுத்தவரை திமுக, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில்தான் கொண்டு வரப்பட்டது எனக்கூறிய அவர், தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழியைத் திணிப்பதாக ஏன் கூறுகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார்.
அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, கேகேஎஸ்எஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் தெலுங்கு மொழி பேசுவோர் என்றும், முதலமைச்சர் கேரளா சென்றபோது மலையாளத்தில் பேசியிருந்தது அற்புதமாக இருந்தது எனவும் குறிப்பிட்டார்.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது பேரவையில் தெலுங்கில் பேச உறுப்பினருக்கு அனுமதி வழங்கப்பட்டது எனவும் சுட்டிக்காட்டினார்.
கருணாநிதி கொண்டுவந்த மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்திற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி எந்தவித பதிலும் தெரிவிக்கவில்லை எனக்கூறிய அவர், ஒட்டுமொத்த அதிகாரத்தையும் மாநிலத்திடம் வழங்கக் கோருவது நாட்டின் வலிமையைக் குறைக்கும் எனத் தெரிவித்தார்.
மேலும், பேசி முடிவெடுப்பதைத் தவிர்த்து ஒட்டுமொத்த சுயாட்சி வேண்டும் என்பதை ஏற்க முடியாது எனவும் நயினார் நாகேந்திரன் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சரின் மாநில சுயாட்சி தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.