அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அஜித் குமார், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘குட் பேட் அக்லி’ படம் வசூலை வாரி குவித்து வருகிறது. இந்தப் படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்கள் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டன.
இந்நிலையில், தனது அனுமதியில்லாமல் அந்தப் பாடல்கள் பயன்படுத்தப்பட்டது பதிப்புரிமைக்கு எதிரானது என்றும், இதனால் 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மேலும், 7 நாட்களில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் இருந்து தாம் இசையமைத்த பாடல்களை நீக்காவிட்டால், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நோட்டீஸில் இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.