மியான்மரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்திய விமானப் படை விமானத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்தப் பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சைபர் தாக்குதலில் ஈடுபட்டது யார் ? இந்த சவாலை, இந்திய விமானப் படை விமானிகள் எப்படிச் சமாளித்தார்கள் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த மார்ச் மாதம், மியான்மரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். மேலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்தனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மர் மக்களுக்கு உதவுவதற்காக, ஆபரேஷன் பிரம்மாவை இந்தியா தொடங்கியது. தேடல் மற்றும் மீட்புப் பணிகளுடன், மருத்துவ உதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை இந்தியா வழங்கத் தொடங்கியது.
மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளவும், பேரிடர் நிவாரண பொருட்களை வழங்கவும் சுமார் ஆறு IAF விமானங்களிலும், ஐந்து இந்தியக் கடற்படைக் கப்பல்களிலும் மொத்தம் 625 மெட்ரிக் டன் நிவாரண பொருட்கள் மியான்மருக்கு இந்தியா வழங்கியுள்ளது.
இந்நிலையில், மியான்மரில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படையின் C-130J விமானம், ஜிபிஎஸ்-ஸ்பூஃபிங் (GPS spoofing) என்ற சைபர் தாக்குதலை எதிர்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜிபிஎஸ் ஸ்பூஃபிங் (GPS spoofing) என்பது ஒரு வகையான சைபர் தாக்குதலாகும். இராணுவ மற்றும் சிவிலியன் விமானங்களை தவறாக வழிநடத்த ஜிபிஎஸ் ஸ்பூஃபிங் பயன்படுத்தப்படுகிறது.
உண்மையான செயற்கைக்கோள் தரவை மீறி, போலியான பொய்யான சிக்கனல்களை அனுப்பி, விமானியைக் குழப்புவதாகும். இந்த தாக்குதல்கள், விமானத்தின் சரியாகச் செல்லும் திறனை முடக்கி விடும். அதனால், விமானம் வழி மாறி செல்லத் தொடங்கும். இதனால்,பெரும் விபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
உலகம் முழுவதும், ஜிபிஎஸ் ஸ்பூஃபிங் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா போன்ற ராணுவ பதற்றமுள்ள பகுதிகளில் ஜிபிஎஸ் ஸ்பூஃபிங் (GPS spoofing) தாக்குதல் அதிகரித்துள்ளது.
காசா போரில், இஸ்ரேல் இராணுவம் ஜிபிஎஸ் ஸ்பூஃபிங்கைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. அதுபோல, உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷ்யாவும் அதிக அளவில் ஜிபிஎஸ் ஸ்பூஃபிங்கை பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
ஏற்கெனவே இந்திய-பாகிஸ்தான் எல்லைகளில், குறிப்பாக,பஞ்சாப் மற்றும் ஜம்முவில், கடந்த காலங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட GPS spoofing தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்நிலையில், மியான்மர் மீது பறக்கும் போது இந்திய விமானப்படையின் C-130J சூப்பர் ஹெர்குலஸ் விமானத்தின் மீது இந்த GPS spoofing தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
GPS spoofing சீனாவால் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கிறது. என்றாலும், இந்திய விமானப் படை தரப்பில் இருந்து, யாரால் இந்த தாக்குதல் நடத்தப் பட்டது என்று தெரிவிக்கப் படவில்லை.
இந்த சைபர் தாக்குதல்கள் மூலம் விமானிகளுக்குப் பொய்யான தகவல்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளன. இதனால் குழப்பமடைந்த விமானிகள், அவசரக் கால சிக்னல்களை பயன்படுத்தி, உண்மை என்ன என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
உடனடியாக, பயணத்தின் போக்கைப் பராமரிக்கவும் விமானப் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்திய விமானப்படை விமானிகள் விரைவாகச் செயல்பட்டனர். விமானத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், உடனடியாக பாதுகாப்பு அமைப்புகளுக்கு C-130J விமானிகள் மாறினர். சற்றும் எதிர்பாராத சவாலான சூழலைத் திறம்படச் சமாளித்தனர். மிகப் பெரிய சைபர் தாக்குதலை இந்திய விமானப்படை விமானிகள் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர்.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு வடக்கே கோகோ தீவுகள் அமைந்துள்ளன. நீண்ட தூர மின்னணு போர் அமைப்புகள் இத் தீவுகளில் அமைக்கப்பட்டிருந்தால், அவை, மியான்மரின் வான்வெளியில் சைபர் தாக்குதலில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது.
நீண்ட காலமாகவே சிக்னல்கள் புலனாய்வு (SIGINT) மற்றும் ரேடார் வசதிகள் இந்த தீவுகளில் இருப்பதாக உலக அளவில் சந்தேகம் இருந்து வருகிறது.
இப்போது, இந்திய விமானப்படை விமானம் C-130J மீது நடந்த சைபர் தாக்குதலுக்கும், கோகோ தீவுகள் உள்ளதாகக் கூறப்படும், மின்னணு போர் உள்கட்டமைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.