சவுக்கு சங்கர் வீடு சூறையாடப்பட்டது தொடர்பாக அவரது தாயார் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டில் மார்ச் 24ம் தேதியன்று அத்துமீறி நுழைந்த சிலர், அங்கிருந்த பொருட்களை உடைத்து, கழிவுகளை வீசிவிட்டுச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என அவரது தாயார் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் அரசியல் தொடர்பு இருப்பதால் சிபிசிஐடி முறையாக விசாரணை நடத்தாது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், இதுவரை 5 பேரைக் கைது செய்துள்ளதாக சிபிசிஐடி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவைத் தள்ளுபடி செய்தார். 12 வாரங்களில் விசாரணை விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என சிபிசிஐடிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.